Sunday 5th of May 2024 05:17:50 PM GMT

LANGUAGE - TAMIL
புளொட்டின் ஆதரவு சஜித்துக்கு! ரெலோவின் தீர்மானம் நாளை!!

புளொட்டின் ஆதரவு சஜித்துக்கு! ரெலோவின் தீர்மானம் நாளை!!


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளது என அதன் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

அதேவேளை, மற்றைய பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது என அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அந்தக் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து அதன் தலைவர்களிடம் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

"நாம் கட்சியாக இன்னமும் தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை. நாளை புதன்கிழமை எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல் வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது. நாம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது. சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார். நாளை நாம் எமது தீர்மானத்தை அறிவிப்போம்" - என்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் இது குறித்து கூறுகையில்,

"நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னமே எடுக்கப்பட்ட தீர்மானம். அதாவது நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது. அதில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்தத் தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம். எமது நோக்கம் என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. ஆதரவு விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

எமது ஆதரவு குறித்து வினவினார். நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானம் குறித்து அவருக்குக் கூறினேன். ரெலோவின் நிலைப்பாடு குறித்து அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் பேசுவதாகப் பிரதமர் கூறினார். எவ்வாறு இருப்பினும் எமது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாஸவின் வெற்றுக்காக வழங்க வேண்டும். எங்களின் ஆதரவு தமக்குக் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகப் பிரதமர் என்னிடம் தெரிவித்தார்" - என்றார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE